அன்புச் சுட்டிகளே
அன்பு முத்தங்கள். ‘சிங்கம் ஏன் ராஜாவாக இருக்கிறது?’ என்ற இந்த சிறுவர் சிறுகதை நூலின் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. எனது குழந்தை இலக்கியப் பணிகளைப் பாராட்டி தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், சென்னை புத்தகக் கண்காட்சி அமைப்பான பாபசி, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், இராஜபாளையம் மணிமேகலை மன்றம், திருப்பூர் தமிழ்ச் சங்கம் போன்ற பெருமை மிக்க அமைப்புகள் எனக்கு விருதுகளையும் பட்டங்களையும் அளித்து கௌரவித்துள்ளன. இராஜபாளையம் மணிமேகலை மன்றம் எனக்கு “சிறுவர் இலக்கியச் செம்மல்” என்ற பட்டத்தினை சமீபத்தில் வழங்கி கௌரவித்துள்ளது. இவை எல்லாம் குழந்தைகளாகிய உங்களுக்காக எழுதுவதால் எனக்குக் கிடைத்த பெருமைகள். தற்போது நான் எழுதியுள்ள இந்த சிறுவர் சிறுகதைத் தொகுப்பில் நீங்கள் படித்து மகிழ விலங்குகளை கதாபாத்திரங்களாக வைத்து பத்து கதைகளை எழுதியுள்ளேன். படித்து மகிழுங்கள். சிறந்த குடிமக்களாக உங்களை உருவாக்கிக் கொள்ள உங்களுக்கான இத்தகைய இலக்கியங்கள் துணை நிற்கும்.