வணக்கம். சுற்றுலா என்பது நம் வாழ்க்கையில் தவிர்க்கக் கூடாத ஒரு விஷயம் என்பதை நாம் உணர வேண்டும். பிறப்பு, வளர்ச்சி, கல்வி, பொருள் ஈட்டுதல், குழந்தைகள், அவர்களின் திருமணம், நம் எதிர்காலம், ஏமாற்றங்கள், வயோதிகம், இறப்பு. இதுவே நம்மில் பலரின் வாழ்க்கைப் பயணமாக அமைந்து விடுகிறது. உலகில் உள்ள உயிரினங்களில் மனிதர்களாகிய நாம் மட்டும்தான் எதிர்காலத்தை நினைத்து கவலைப்பட்டு கவலைப்பட்டு நிகழ்காலத்தை அனுபவிக்காமல் இருந்துவிடுகிறோம். “நிகழ்காலத்தில் வாழுங்கள்” என்பதே புத்தரின் பிரதான போதனை என்பதை இக்கணத்தில் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
பிரம்மாண்டமான இந்த பூமியில் நாம் நிற்கும் இடம் எவ்வளவு ஒரு மிகச் சிறிய புள்ளி என்பதை ஒரு கணம் கற்பனை செய்து பாருங்கள். விதவிதமான இடங்கள், விதவிதமான மனிதர்கள், விதவிதமான மொழிகள், விதவிதமான மனோபாவங்கள், விதவிதமான அனுபவங்கள். உலகின் எந்த கல்வி நிலையமும் கற்றுத் தராத, கற்றுத் தர இயலாத விஷயங்களை சுற்றுலா மட்டுமே கற்றுத் தரும். இந்த பிரம்மாண்டமான உலகத்தில் நாம் யார் என்பதை நமக்குப் புரிய வைக்கும்.
ஊர் சுற்றுவது எனக்குப் பிடித்தமான ஒன்று. சமீபத்தில் அந்தமானுக்குப் பயணித்தேன். அங்கே நான் கண்டவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். அற்புதமான புதையல்களைக் கொண்ட இடம் அந்தமான். நான் புதையல் என்பது தங்கத்தையோ வைரத்தையோ அல்ல. காடு, மலை, இயற்கை வளங்கள், கடல், தீவுகள் என சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியையும் அரசுக்கு கணிசமான வருமானத்தையும் அள்ளித்தரும் இடம் தான் அந்தமான் தீவுகள். இதையே என் பார்வையில் நான் புதையல் என்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அந்தமான் செல்லுங்கள். சுற்றுலா பயணிகளுக்கு அனைத்து விதத்திலும் பாதுகாப்பையும் மனமகிழ்ச்சியையும் தரும் ஒரு இடம் அந்தமான் தீவுகள்.