“ஒரு யோகியின் சுயசரிதம்” புத்தகத்தை நான் ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன்னால் படித்திருக்கிறேன். அப்போதுதான் பாபாஜியைப் பற்றி முதன் முதலாய் அறிந்தேன். அவருடைய உருவத்தை முதன்முதலாய் அந்த புத்தகத்தில் தான் பார்த்தேன். பாபாஜியின் உருவத்தை முதன்முதலில் பார்க்கும் எவருக்கும் அவருடைய உருவம் மனதில் பதிந்து போய்விடும். பாபாஜி வித்தியாசமான உருவ அமைப்பைக் கொண்டவர். அவர் உருவத்தைப் பார்க்கும் போதே அவர் முற்றிலும் மாறுபட்ட ஒரு பிறவி என்பது நமக்குப் புரியும்.
பாபாஜியின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவது அவ்வளவு சுலபமான பணி அல்ல என்பது எழுத ஆரம்பித்ததுமே புரிந்தது. மிக நிதானமாக ஒவ்வொரு அத்தியாயத்தையும் எழுதினேன். சில மாதங்களில் புத்தகம் நிறைவு பெற்றது. திருப்திகரமாகவும் அமைந்தது. இந்த புத்தகத்தை எழுத பல நூல்கள் பார்வை நூல்களாக பயன்பட்டன. அவற்றை எழுதிய எழுத்தாளர்களுக்கும் பதிப்பித்தவர்களுக்கும் என் நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.