வணக்கம். சமீபத்தில் ‘The Man Who Knew Infinity’ என்ற ஹாலிவுட் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஏற்கெனவே இராமானுஜனைப் பற்றி சிறிது அறிந்திருந்தாலும் இந்த திரைப்படம் இராமானுஜனைப் பற்றிய ஆச்சரியத்தை எனக்குள் ஏற்படுத்தியது. இராமானுஜன் எவ்வளவு பெரிய கணிதமேதை என்பதை நினைத்துப் பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து இராமானுஜனைப் பற்றி திரு.ரகமி அவர்கள் எழுதி ‘கணிதமேதை இராமானுஜன்’ என்ற தலைப்பில் வெளிவந்த இராமானுஜனின் வாழ்க்கை வரலாற்றை ஆழ்ந்து படித்தேன். இணையத்தளங்களில் இராமானுஜனைப் பற்றி வெளிவந்திருக்கும் ஏராளமான கட்டுரைகளைப் படித்தேன்.
திரு.கரந்தை.ஜெயக்குமார் என்பவர் எழுதிய ‘கணிதமேதை சீனிவாச இராமானுஜன்’ என்ற மின்னூலையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இராமானுஜனின் வாழ்க்கை வரலாற்றை மிகவும் சிரமப்பட்டு எழுதி பதிவு செய்துள்ள இந்த இரண்டு நூலாசிரியர்களுக்கும் என் நன்றியை இந்த நேரத்தில் உரித்தாக்குகிறேன்.
இன்றைய தலைமுறையினர் இராமானுஜனைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இராமானுஜனின் வாழ்க்கை வரலாற்றை சிறிய அளவில் எழுதியுள்ளேன்.
இளைய தலைமுறையினர் இந்த புத்தகத்தை அவசியம் படித்து இராமானுஜனைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். பள்ளி கல்லூரி கணித ஆசிரியர்கள் இது போன்ற அரிய மனிதர்களின் வரலாற்று நூல்களைப் படித்து அதை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.
கணிதமேதை இராமானுஜனை வருங்காலக் குழந்தைகள் அறியாமல் இருந்துவிடக்கூடாது என்ற எனது எண்ணத்தின் விளைவே இந்த நூல்.