கடந்த முப்பத்தைந்து ஆண்டு காலமாக சிறுவர் இலக்கியம், கணினி அறிவியல், மக்கள் அறிவியல், கவிதை, சிறுகதை, ஆன்மீகம் என பல்வேறு இலக்கியத் தடங்களில் பயணித்து 125 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி முடித்துள்ள எனது முதல் நூல் “ஹைகூ கவிதைகள்” என்ற தலைப்பில் 1993 ல் வெளியானது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தற்போது மிக நிதானமாகவும் கவனமாகவும் “ஒற்றை எறும்பு” என்ற தலைப்பில் மற்றுமொரு ஒரு ஹைகூ கவிதை நூலை எழுதியுள்ளேன். பார்ப்பதற்கு சிறிய வடிவமாக இருந்தாலும் படிப்பவர்களின் மனதில் அதனால்தான் பல்லாண்டு காலமாக இந்த வடிவம் நிலைபெற்று நிற்கிறது.
தமிழ் பத்திரிகை உலகில் கவிதைகளுக்கு எப்போதுமே முக்கியத்துவம் தரப்படுவதில்லை. தற்காலத்தில் மரபுக்கவிதைகள் மறந்தே போய்விட்டன. புதுக்கவிதைகள் எப்போதாவது சில பத்திரிகைகளில் தென்படுகின்றன. ஆங்காங்கே விடுபடும் காலி இடங்களை நிரப்ப பல பத்திரிகைகள் ஹைகூ கவிதைகள் என்ற பெயரில் துணுக்குகளை வெளியிடுகின்றன. ஹைகூ கவிதை நூல்களும் தற்போது அவ்வளவாக வெளியிடப்படுவதில்லை. இவற்றிற்கெல்லாம் ஒரு சிறிய தீர்வாக இந்த நூலை உருவாக்கியுள்ளேன்.